வெள்ளி, 30 அக்டோபர், 2009

மகாபாரதம் - பாகம் ஒன்று

உலகம் போற்றும் இதிகாசங்கள் ராமாயாணமும், மகாபாரதமும். ராமாயணத்தை விட மகாபாரதம் பெரியது. ஒரு லட்சம் ஸ்லோகங்களைக் கொண்ட இதில் மனித வாழ்வில் எழும் சிக்கல்களும் உண்டு. அதைத் தீர்க்கும் வழிகளும் உண்டு. இது சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் நடந்த வரலாறு என்று கூறப்படுகிறது. மகாபாரதப்போரில் ஈடுபட்ட வீரர்கள் எண்ணிக்கை முப்பத்தொன்பது லட்சத்து முப்பத்தாறாயிரத்து அறுனூறு. பதினெட்டு நாட்கள் போருக்குப்பின் 10 பேர் தவிர அனைவரும் மாண்டனர். இறை நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே இதை படிக்க வேண்டும் என்பதில்லை அனைவரும் படிக்கலாம். தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றதை விட்டு விடலாம். இப்பதிவின் நோக்கம் எளிமையாக மகாபாரதக் கதையை சொல்ல வேண்டும் என்பதுதான். உள்ளே புகுமுன்....

பராசர மகரிஷியின் புத்திரர் வியாசர் வேதங்களை தொகுத்தளித்தவர்.இவர்தான் மகாபாரதம் என்ற புண்ணியக்கதையைக் கொடுத்தவர். பாரதத்தை எப்படி உலகுக்கு அளிப்பது என வியாசர் சிந்தித்தார்.பிரம்மனை தியானித்தார்.பிரம்மன் நேரில் காட்சிக் கொடுத்ததும் அவரிடம் பகவானே இதை எழுதுகிறவர் பூமியில் யாரும் இல்லையே என்றார். பிரம்மனும் உம்முடைய நூலை எழுத கணபதியை தியானம் செய்யவும் என்று கூறிச் சென்றார். வியாசர் கணபதியை தியானிக்க கணபதி தோன்றினார் வியாசர் அவரிடம் பாரதத்தை நான் சொல்லச் சொல்ல நீர் எழுத வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்தார். வினாயகரும் ஒப்புக்கொண்டு சரி ஆனால் நான் எழுதும் போது என் எழுதுகோல் நிற்காது எழுதிக்கொண்டே போகும் இதற்கு சம்மதித்தால் எழுதுகிறேன் என்றார். இந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்ட வியாசர் பொருளை உணர்ந்துக் கொண்டுதான் நீர் எழுத வேண்டும் என்றார். வினாயகரும் சம்மதிக்க வியாசர் சொல்ல ஆரம்பித்தார்.ஆங்காங்கு பொருள் விளங்காமல் முடிச்சுகளை வைத்து அவர் சொல்லிக் கொண்டு போக ..பொருள் அறிய கணேசன் தயங்கிய நேரத்தில்..மற்ற ஸ்லோகங்களைமனதில் கொண்டு வந்து வியாசர் சொன்னார். இட்சுவாகு குலத்தைச் சேர்ந்த மகாபிஷக் என்ற மன்னன் இவ்வுலகை ஆண்டு வந்தான்.அவனது புண்ணியச் செயல்களால். அவன் இறந்ததும் தேவலோகம் அடந்தான்.தேவர்களுடன் சேர்ந்து அவன் பிரம்ம தேவரை வணங்கச் சென்றான்..அப்போது கங்கை நதி கங்காதேவி வடிவில் அங்குத் தோன்றினாள்.
கங்காதேவியின் ஆடை காற்றில் சற்றே விலக அதைக்கண்ட தேவர்களும். ரிஷிகளும்.நாணத்தால் தலைக் குனிய. மோக வயப்பட்ட மகாபிஷக் மட்டும். அவளையே சற்றும் நாணமின்றி நோக்கினான். இச்சம்பவத்தால் கடும் கோபம் அடைந்த பிரம்மன் மகாபிஷக்கை பூ உலகில் மனிதனாகப் பிறந்து கங்காதேவியால் விருப்பத்தகாத சிலவற்றை சந்தித்து..துன்புற்றுப் பின் சில வருஷங்கள் கழித்து.நல்லுலகை அடைவாயாக என சபித்தார். பின் அவன் பிரதீப மன்னனின் மகனாகப் பிறந்தான்.
பிரம்மதேவர் அவையில் தன்னை நோக்கிய மகாபிஷக்கை கங்காதேவியும் கண்டு காதல் கொண்டாள்.அவள் திரும்பி வரும்போது..அஷ்ட வசுக்களை சந்தித்தாள்.அவர்கள் மனக்கவலையில் இருந்தனர்.
'தேவி..வசிஷ்டருக்கு சினம் வரும்படி நடந்துக் கொண்டதால் அவர் எங்களை மனிதர்களாக பிறக்க சபித்து விட்டார்.ஆகவே..எங்களுக்கு பூமியில் நீங்கள் தாயாகி எங்களை பெற்றெடுக்க வேண்டும்'என வேண்டினர்.
'உங்களை மண்ணுலகில் பெற்றெடுக்க நான் தயார்..ஆனால்..அதற்கு நீங்கள் விரும்பும் தந்தை யார்' என கங்காதேவி கேட்டாள்.
'தாயே! பிரதீப மன்னன் மண்ணுலகில் புகழுடன் திகழ்கிறான்.அவனுக்கு சந்தனு என்ற மகன் பிறந்து..நாடாளப்போகிறான்.அவனே எங்கள் தந்தையாக விரும்புகிறோம்.'என்றனர் வசுக்கள்.

இதைக்கேட்டு..கங்காதேவியும் மகிழ்ந்தாள்.

மீண்டும்..வசுக்கள்..'வசிஷ்டரின் சாபம் நீண்டகாலம் கூடாது..ஆகவே நாங்கள் பிறந்ததும்..உடனே எங்களை தண்ணீரில் எறிந்து..ஆயுளை முடித்து விட வேண்டும்' என்றனர்.
'உங்கள் கோரிக்கைக்கு ஒரு நிபந்தனை..புத்திரப்பேறு கருதி..ஒரு மகனை மன்னரிடம் விட்டுவிட்டு..மற்றவர்களை...நீங்கள் சொல்வது போல செய்கிறேன்' என வாக்களித்தாள் கங்கை.
வசுக்கள் மகிழ்ச்சியுடன் விடை பெற்றனர்.
பிரதீப மன்னன் கங்கைக்கரையில் தியானத்தில் இருந்தான்.அப்போது கங்காதேவி,,நீரிலிருந்து கரையேறி மன்னன் முன் நின்றாள்'மன்னா..உங்களுக்கு பிறக்கப் போகும் மகனுக்கு..மனைவியாக விரும்புகிறேன்' என்றாள்.
மன்னனும், 'அவ்வாறே ஆகட்டும்..' என்றான்.
பிரதிபனின் மனைவிக்கு ஒரு மகன் பிறந்தான்.அது..பிரம்ம தேவன் சாபப்படி பிறந்த மகாபிஷக் ஆகும்.அவனுக்கு சந்தனு எனப் பெயரிட்டனர்.
சந்தனு...வாலிபப்பருவம் அடைந்ததும்...அனைத்துக் கலைகளிலும் வல்லவன் ஆனான்.ஒரு நாள் மன்னன் அவனை அழைத்து, 'மகனே! முன்னர் ஒரு பெண் என் முன்னே தோன்றினாள்.தேவலோகத்துப் பெண்ணான அவள்..என் மருமகளாக விரும்புவதாகக் கூறினாள்.அவள்..உன்னிடம் வரும் போது..அவள் யார் என்று கேட்காதே! அவளை அப்படியே ஏற்றுக்கொள்! இது என் கட்டளை' என்றான்.
பின்னர், பிரதீபன்..அவனுக்கு முடி சூட்டி விட்டு..காட்டுக்குச் சென்று தவம் மேற்கொண்டான்
வேட்டையாடுவதில் விருப்பம் கொண்ட சந்தனு, ஒரு நாள் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்த போது, ஒரு அழகிய பெண் நேரில் வரப் பார்த்தான்.இருவரும் ஒருவர் இதயத்துள் ஒருவர் புகுந்து ஆனந்தம் அடைந்தனர்.
சந்தனு 'நீ யாராயிருந்தாலும், உன்னை மணக்க விரும்புகிறேன் என்றான்.
அந்த பெண்...கங்காதேவி. அவள் தன் நிபந்தனைகளை அவனிடம் தெரிவித்தாள். தன்னைப் பற்றி ஏதும் கேட்கக் கூடாது..தன் செயல்களில் தலையிடக் கூடாது..நல்லதாய் இருந்தாலும், தீதாயிருந்தாலும் தன் போக்கில் விடவேண்டும்.அவ்வாறு நடந்துக் கொண்டால்..அவனது மனையியாக சம்மதம் என்றாள்.
காம வயப்பட்டிருந்த சந்தனு,,அந்த நிபந்தனைகளை ஏற்றான்.திருமணம் நடந்தது. தேவசுகம் கண்டான் மன்னன்.
பல ஆண்டுகள் கழித்து, அவள் ஒரு குமாரனைப் பெற்றாள். உடன், அக்குழந்தையை கங்கையில் வீசும்படிச் சொல்ல, திடுக்கிட்ட மன்னனுக்கு..நிபந்தனைகள் ஞாபகம் வர..அப்படியே செய்தான்.இது போல தொடர்ந்து ஏழு குழந்தைகளை செய்தான்.
எட்டாவது குழந்தை பிறந்த போது..பொறுமை இழந்த மன்னன்..'இதைக் கொல்லாதே..நீ யார்? ஏன் இப்படி செய்கிறாய்? இக் குழந்தையாவது கொல்லாதே!' என்றான்.
உடன்..கங்காதேவி, 'மன்னா..இம்மகனைக் கொல்லமாட்டேன்..ஆனால், நிபந்தனைப் படி நடக்காமல்..என்னை யார்? எனக் கேட்டதால்..இனி உன்னுடன் வாழ மாட்டேன். ஆனால்..நான் யார் என்பதை சொல்கிறேன்' என்றாள்.
'நான் ஜன்கு மகரிஷியின் மகள்.என் பெயர் கங்காதேவி.தேவர்களுக்கு உதவவே..நான் உன்னுடன் இருந்தேன்.நமக்குக் குழந்தைகளாக பிறந்த இவர்கள்..புகழ் வாய்ந்த எட்டு வசுக்கள்.வசிஷ்டரின் சாபத்தால்..இங்கு வந்து பிறந்தனர்.உம்மைத் தந்தையாகவும், என்னை தாயாகவும் அடைய விரும்பினர்.அவர் விருப்பமும் நிறைவேறியது.சாப விமோசனமும் அடைந்தனர்.எட்டாவது மகனான இவன், பெரிய மகானாக திகழ்வான்.இவனைப் பெற்ற என் கடமை முடிந்தது..எனக்கு விடை தருக' என்றாள்.
கங்காதேவியின் பேச்சைக் கேட்ட சந்தனு..'ஜன்கு மகரிஷியின் மகளே! புண்ணிய புருஷர்களான வசுக்களுக்கு வசிஷ்டர் ஏன் சாபம் இட்டார்?இவன் மட்டும் ஏன் மண்ணுலகில் வாழ வேண்டும்..அனைத்தையும் விளக்கமாக சொல்' என்றான்.
கங்காதேவி..கூறத் தொடங்கினாள்.

#'மன்னா..வருணனின் புதல்வனான வசிஷ்டர் முனிவர்களில் சிறந்தவர்.மேருமலைச் சாரலில் தவம் செய்துக் கொண்டிருந்தார்.அவரிடம் நந்தினி என்ற பசு ஒன்று இருந்தது.ஒரு நாள் தேவர்களாகிய இந்த எட்டு வசுக்களும் தத்தம் மனையியருடன் அங்கு வந்தனர்.அப்போது பிரபாசன் என்னும் வசுவின் மனைவி நந்தினியைக் கண்டு..தனக்கு அது வேண்டும் என்றாள்.
மனைவியின்..கருத்தை அறிந்த பிரபாசன்..'இது வசிஷ்ட மகரிஷிக்கு சொந்தமானது.இது தெய்வத்தன்மை வாய்ந்தது..இதன் பாலைப்பருகும் மனிதர்கள் இளமைக் குன்றாமல், அழகு குறையாது..நீண்ட நாள் வாழ்வார்கள்' என்றான்.
உடனே அவன் மனைவி'மண்ணுலகில் எனக்கு ஜிதவதி என்ற தோழி இருக்கிறாள்.அவள் அழகும், இளமையும் கெடாமலிருக்க..இப்பசுவை அவளுக்குத் தர விரும்புகிறேன்'என்றாள்.
மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற பிரபாசன்..மற்ற வசுக்களுடன் காமதேனுவை கன்றுடன் பிடித்துக் கொண்டு வந்தான்.
வசிஷ்டர் ஆசிரமத்திற்கு வந்து பார்த்த போது..பசுவும்..கன்றும் களவாடப்பட்டிருப்பதைக் கண்டார்.'என் பசுவையும்,கன்றையும் களவாடிய வசுக்கள்..மண்ணில் மானிடராகப் பிறக்கட்டும் என சபித்தார்.
வசிஷ்டரின் சாபத்தை அறிந்த வசுக்கள் ஓடோடி வந்து..பசுவையும்,கன்றையும் திருப்பிக் கொடுத்து விட்டு..அவர் காலில் விழுந்து மன்னிக்க வேண்டினர்.
'பிரபாசனைத் தவிர மற்றவர்கள் உடனே சாப விமோசனம் அடைவர்.பிரபாசன் மட்டும் நீண்ட காலம் மண்ணுலகில் வாழ்வான்.அவன் பெண் இன்பத்தைத் துறப்பான்.சந்ததியின்றி திகழ்வான்.சாத்திரங்களில் வல்லவனாக திகழ்வான்,,எல்லோருக்கும் நன்மை செய்வான்' என்றார் வசிஷ்டர். வசிஷ்டரின் சாபத்தை சொன்ன கங்காதேவி..'பிரபாசன்..என்னும் வசுவாகிய இவனை..நான் என்னுடன் அழைத்துச் செல்கிறேன்.பெரியவன் ஆனதும் தங்களிடம் ஒப்படைக்கிறேன்..நானும் தாங்கள் அழைக்கும் போது வருகிறேன்'என்று கூறிவிட்டு மறைந்தாள். தேவவிரதன் என்றும், காங்கேயன் என்றும் பெயர் கொண்ட அவன்..மேலான குணங்களுடன் வளர்ந்தான். மனைவியையும், மகனையும் இழந்த சந்தனு பெரிதும் துன்ப வேதனையுற்றான். பின்..மீண்டும் நாட்டாட்சியில் நாட்டம் செலுத்த ஆரம்பித்தான்.அஸ்தினாபுரத்தை தலைநகராய்க் கொண்டு அனைவரும் போற்றும் விதமாய் அரசாண்டான். இந்திரனுக்கு..இணையானவனாகவும்..சத்தியம் தவறாதவனாகவும்..விருப்பு..வெறுப்பு அற்றவனாகவும்..வேகத்தில் வாயுக்கு இணையாகவும், சினத்தில் எமனுக்கு இணையாகவும் ..அறநெறி ஒன்றையே வாழும் நெறியாகக் கொண்டு ஆட்சி நடத்தி வந்தான். சந்தனு..காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்த போது..கங்கை நதியைக் கண்டான்..இந்த நதியில் நீர் ஏன் குறைவாக ஓடுகிறது..பெருக்கெடுத்து ஓடவில்லை..என்று எண்ணியபடியே நின்றான். அப்போது ஒரு வாலிபன், தன் அம்பு செலுத்தும் திறமையால்..கங்கை நீரை தடுத்து நிறுத்துவதைக் கண்டான்.உடன் கங்காதேவியை அழைத்தான்.கங்காதேவி, தன் மகனை கைகளில் பிடித்தபடி,மன்னர் முன் தோன்றினாள். 'மன்னா..இவன் தான் நமது எட்டாவது மகன்.இவன் அனைத்துக் கலைகளையும் அறிந்தவன்.வசிஷ்டரின் வேதங்களையும்,வேத அங்கங்களையும் கற்றவன்.தேவேந்திரனுக்கு இணையான இவனை..இனி உன்னிடம் ஒப்படைக்கிறேன்' என்று கூறிவிட்டு கங்காதேவி மறைந்தாள். தன் மகனுக்கு..சந்தனு, இளவரசு பட்டம் சூட்டினான்.தன் மகனுடன்..நான்கு ஆண்டுகள் கழித்த நிலையில்..மன்னன் யமுனை கரைக்கு சென்ற போது..ஒரு அழகிய பெண்ணைக் கண்டான்.'பெண்ணே..நீ யார்?யாருடைய மகள்?என்ன செய்கிறாய்?' என்றான்.
அதற்கு அவள்,'நான் செம்படவப் பெண்..என் தந்தை செம்படவர்களின் அரசன்..நான் ஆற்றில் ஓடம் ஓட்டுகிறேன்' என்றாள். அவள் அழகில் மயங்கிய அரசன்..அவளுடன் வாழ விரும்பி..அப்பெண்ணின் தந்தையைக் காணச்சென்றான். செம்படவன்..மன்னனை நோக்கி'இவளை உங்களுக்கு மணம் முடிக்க ஒரு நிபந்தனை.அதை நிறைவேற்றுவதாக இருந்தால்..மணம் முடித்துத் தருகிறேன்' என்றான். அந்த நிபந்தனை..என்ன? நிறைவேற்ற முடியாததாக இருந்தால் வாக்கு தரமாட்டேன்..என்றான் மன்னன். மன்னா..என் மகளுக்கு பிறக்கும்..மகனே..உன் நாட்டை ஆள வேண்டும்' என்றான் செம்படவன். நிபந்தனையை ஏற்க மறுத்த மன்னன் ஊர் திரும்பினான்.ஆனாலும் அவனால் அப்பெண்ணை மறக்க முடியவில்லை.உடலும் உள்ளமும் சோர்ந்து காணப்பட்டான். தந்தையின் போக்கைக் கண்ட தேவவிரதன்..அவனிடம் போய்..'தந்தையே தங்களின் துயரத்துக்கான காரணம் என்ன?'என்றான். மகனிடம், தன் நிலைக்கான காரணத்தைச் சொல்ல..நாணிய மன்னன்..மறைமுகமாக'மகனே..இக்குல வாரிசாக நீ ஒருவனே இருக்கிறாய்..யாக்கை நிலையாமை என்பதை நீ அறிவாயா?நாளை திடீரென உனக்கு ஏதேனும் நேர்ந்தால்..நம் குலம் சந்ததி அற்றுப் போகும்.ஒரு மகன் இறந்தால்..குலத்திற்கு அழிவு ..என சாத்திரங்கள் கூறுகின்றன.அதனால் சந்ததி எண்ணிி மனம் ஏங்குகிறேன்' என்றான்.செம்படவப் பெண் பற்றிக் கூறவில்லை.மன்னன் ஏதோ மறைக்கிறான் என தேவவிரதன் உணர்ந்தான். மன்னனின்..தேரோட்டியைக் கேட்டால், உண்மை அறியலாம் என..தேரோட்டியைக் கூப்பிட்டு விவரம் கேட்டான். தேரோட்டி'உங்கள் தந்தை ஒரு செம்படவப் பெண்ணை விரும்புகிறார்.அவளை மணந்தால்..அவளுக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்கு முடி சூட்டப் படவேண்டும் என்று நிபந்தனை போடுகிறார்கள்.அதற்கு மன்னன் இணங்கவில்லை.அந்தப் பெண்ணையும் அவரால் மறக்க முடியவில்லை'என்றான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக